சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8,38,016 பேர் விண்ணப்பம் செய்ததாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 8,38,016 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க 1,19,701 பேரும், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்ற அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்ற அல்லது நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய 4,42,111 பேரும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்க 783 பேர், வெளிநாடு வாழ் தமிழர்கள் 4 பேர் என மொத்தம் 14,00,615 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8,38,016 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.