
சென்னை,
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (24-ந்தேதி) திறந்து வைக்கிறார். முதல்வர் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "மக்களுக்கான திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் பிறந்தநாளில் கூட தொடங்கி வைக்கலாம், அதில் தவறில்லை" என்று கூறினார்.
மேலும், அம்மா மருந்தகம் மூடப்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும், கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம், பிரதமர் மருந்தகம் ஆகியவற்றுடன் முதல்வர் மருந்தகம் என ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.