
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது.
இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தானின் செயலால் தான் காரணம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாவது:-
பொறியியல் நுட்பங்கள், காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட சூழ்நிலைகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளன. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து வருகிறது. ஒப்பந்தத்தின் முன்னுரையில், அது நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் உண்மையில் பாகிஸ்தானால் கைவிடப்பட்டுள்ளன.
1950மற்றும் 1960களின் முற்பகுதியில் இருந்த பொறியியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்திக் கொள்ளும் நமது திறனில் தலையிடுகிறது. அடிப்படை நில நிலைமைகள் முற்றிலும் மாறியிருக்கும் போது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இயற்கையானது மற்றும் இந்தியாவின் உரிமைக்கு உட்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது