சென்னை: துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில், 90 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. துணை ஆட்சியர் 16, காவல் துணைக் கண்காணிப்பாளர் 23, வணிகவரி உதவி ஆணையர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகியவற்றுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இன்று முதல் டிச. 13ம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணியிடங்களுக்கான உத்தரவு வழங்கப்படும். கடும் கட்டுப்பாடுகள்: தேர்வுக் கூடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வுக் கூடத்திலோ அல்லது தேர்வு மைய வளாகத்திலோ, தேர்வு கண்காணிப்பாளா்களிடமோ அத்துமீறும் செயல்கள் எதிலும் தேர்வர்கள் ஈடுபடக் கூடாது. கைப்பேசிகள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடர்புக்கான கருவிகள் உள்பட அனைத்து நவீன தொலைத்தொடா்புக் கருவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த கட்டுப்பாடுகளை மீறும் தேர்வர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். , தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.