தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

1 week ago 2


சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 6ம் தேதி கூடியது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (திங்கள்) காலை 10.45 மணிக்கு நடந்தது. கூட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் முதல்வரின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக, தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும். அதன்படி, இந்த 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இந்த மாதம் இறுதி வாரத்தில் தாக்கல் செய்வது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2026ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.

அமைச்சர்களின் கருத்துகளை கேட்டு, அந்த அறிவிப்புகள் பற்றி பட்ஜெட்டில் தெரிவிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்து இதுவரை நடைமுறைப்படுத்தாத அறிவிப்புகள் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறார். அந்த புரட்சி என்னவென்று சொன்னால், சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் முதல்வரின் கவனத்திற்கு சென்றது.

இதன் விளைவாக இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடிய அந்த நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சொல்லி முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார். சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை 6 மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962ல் வந்தது. 1962ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதல்வர் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து 6 மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று ஆணையிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை துவங்க உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த பணிகளை நாங்கள் செய்ய இருக்கிறோம். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமைய இருக்கிறது. மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதேபோல பிரச்னை இருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,054 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதல்வர் வழங்கியிருக்கிறார். ஏறத்தாழ 86,000 பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த தீர்மானத்தை இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் 6 மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். 86,000 பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 1962ல் இருந்து 2025 வரை உள்ள பிரச்னையை இன்றைக்கு முடிவு செய்திருக்கிறார்.

இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, 10 லட்சத்து இருபத்தி ஆறாயிரம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். முதல்வர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் ஆறு மாதத்திற்குள்ளாக ஆறு லட்சத்து இருபத்தி ஒன்பாதாயிரம் பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாது என்ற ஒவ்வொரு காரியத்தையும் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த இந்த முடிவு, பெல்ட் ஏரியாவுக்கு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய முடிவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாது என்ற ஒவ்வொரு காரியத்தையும் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்

63 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு: முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்னைக்குத் தீர்வு. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் – நகராட்சிகள் – மாவட்ட தலைநகர பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். 6 மாதங்களில் இதனை செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article