தமிழகத்தை சூழ்ந்த சமூகஅநீதி இருள் விலகி ஒளி பிறக்க தீபஒளி வகை செய்யட்டும் - ராமதாஸ் வாழ்த்து

2 months ago 13

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத்தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால்தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் படுதோல்வி அடைந்துள்ளது. விளைவித்த பயிர்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் கொண்டாட்ட மனநிலையில் திளைக்க வேண்டிய மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்கி நிம்மதியை அளிக்க வேண்டிய அடிப்படைக் கடமையைக் கூட அரசு செய்யவில்லை.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, இளைஞர் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் என அனைத்துத் துறைகளிலும் இருள்தான் சூழ்ந்திருக்கிறது. வண்ண ஒளிகளின் திருவிழா, மத்தாப்புகளின் திருவிழா என ஒருபுறம் தீபஒளித் திருநாளை வர்ணித்தாலும் மக்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது. இந்த இருள் அகற்றப்பட்டு உண்மையான வெளிச்சம் பிறக்கும் போதுதான் தீபஒளி அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருளை பழித்துக் கொண்டு மட்டும் இருப்பதில் பயனில்லை; அதை அகற்றி ஒளியேற்ற வேண்டும். அந்த ஒளியால் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை ஜொலிக்கவும், மக்களின் வாழ்வில் இல்லாமை என்பதே இல்லாததாகி, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க தீப ஒளி வகை செய்யட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article