சென்னை: தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழகம் ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வழிவகுத்துள்ளது.