தமிழகத்தில் முதல் முறையாக கொல்லிமலையில் டார்க் ஸ்கை பார்க் அமைக்கும் பணி தொடக்கம்: இடம், எல்லைகளை வரையறை செய்ய ஆய்வு; வனத்துறை அதிகாரிகள் தகவல்

3 months ago 19

தமிழகத்தில் முதல்முறையாக கொல்லிமலையில் ‘டார்க் ஸ்கை பார்க்’ அமைப்பதற்கு இடம் மற்றும் எல்லைகளை வரையறை செய்வதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கோத்தகிரி, மேகமலை, வால்பாறை உள்ளிட்ட மலைவாழிடங்கள் இருந்தாலும், இவற்றிற்கெல்லாம் மகுடமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை திகழ்கிறது. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம் தான். மேலும், 1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாய கங்கை அருவி என இங்கு பயணிப்பதே ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும்.

இதுமட்டுமல்லாது, வியூ பாயிண்ட், நம்ம அருவி, மாசிலா அருவி, வாசலூர்பட்டி செயற்கை ஏரி, படகு இல்லம், மூலிகைத் தோட்டம், தோட்டக்கலை தோட்டம், தொலைநோக்கி இல்லம், பெரியசாமி கோவில், சித்தர் குகைகள், அறப்பளீஸ்வரர் மற்றும் எட்டுக்கை அம்மன் கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள் என சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கூடிய சுற்றுலா தளங்களில் பிரதானமான ஒன்றாக இருக்கும் கொல்லிமலைக்கு, நகரத்தின் மக்கள் நெருக்கடி, வெப்பம், புகை ஆகியவற்றில் இருந்து விலகி உடல் மற்றும் உள்ள புத்துணர்ச்சிக்கு ஏற்றவாரு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடிய இடமாக விளங்குகிறது.

மாநிலத்தின் முக்கிய மலைப்பகுதியாக கொல்லிமலை கருதப்பட்டாலும், அதனை பகல் நேரத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியை தமிழ்நாடு வனத்துறை வழங்கியுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் கொல்லிமலை கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கும். எனவே இரவு நேரங்களில் நிலவின் வெளிச்சத்தில் கொல்லி மலையின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதன்படி, 2024-25ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா (Dark Sky Park) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, ஒளி மாசுபாட்டின் உலகளாவிய அச்சுறுத்தலில் இருந்து விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவுவதாகவும், இரவுநேர விலங்குகளுக்கு இணக்கமான ஒரு பூங்காவாக அவற்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டன. மேலும், மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பதை இந்த இரவு பூங்கா இருக்கும் என தீர்மானிக்கப்பட்டன. எனவே, இதன் காரணமாக கொல்லி மலையில் இரவு பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆசிய கண்டத்தை பொறுத்தவரை மொத்தம் 5 டார்க் ஸ்கை பார்க் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தன. இதனால், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திரங்களை அடர்ந்த வனத்துக்குள் இருந்து ரசிக்க, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தில் முதல்முறையாகவும், இந்தியாவிலேயே இரண்டாவதாகவும், ஆசியாவில் ஆறாவதாகவும் இரவு பூங்கா அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பூங்கா அமைக்கும் இடத்தையும், அதன் எல்லைகளையும் வரையறை செய்யும் ஆய்வுகளை தற்போது தொடங்கி இருக்கின்றோம். மேலும், வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்தக்கட்டமாக பணிகளை துரிதப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் முதல் முறையாக கொல்லிமலையில் டார்க் ஸ்கை பார்க் அமைக்கும் பணி தொடக்கம்: இடம், எல்லைகளை வரையறை செய்ய ஆய்வு; வனத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article