திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளை மூலவர், ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி மகா கும்பாபிஷேகம் நாளை(3ம் தேதி) நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (2ம் தேதி) காலை 8 மணிக்கு 6ம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாளை (3ம் தேதி) காலை 6 மணிக்கு 8ம் கால யாக பூஜையும், 7 மணிக்கு பரிவார பூர்ணாஹதியும், 9 மணிக்கு கடம்புறப்பட்டு 9.30க்கு விமானம் கோபுரம் மகா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேகமும் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஐயாறப்பர் கோயில் முழுவதும் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் திருவையாறே விழா கோலம் பூண்டுள்ளது.
The post திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.