சென்னை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழறசி உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
The post தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.