தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வசூலாகி, புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதை ஏற்று பிப்.10-ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் மற்றும் கூடுதலாக 4 டோக்கன்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.