சென்னை ,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
கடந்த 16.12.2024 அன்று, வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்குத் தொடர்பிருப்பது தெரிந்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை, நேற்று நாங்கள் கண்டித்த பிறகு, இன்று திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவையும், அவரது மகனையும் கைது செய்திருக்கிறது.
ஒவ்வொரு முறை திமுகவினர் குற்றம் செய்யும்போதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியுள்ளது. பாஜகவினர் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதே தவிர, திமுகவினர் அராஜகத்துக்குத் துணை நிற்பதல்ல. ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .