பாட்னா,
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தும் என்றும், இடஒதுக்கீட்டு வரம்பை தற்போதைய 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தக் கோரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாட்னாவில் நடந்த 'சம்விதான் சுரக்ஷா சம்மேளன்' நிகழ்ச்சியில் பேசிய அவர் நாடாளுமன்றத்தில் இந்த இரண்டு பிரச்சினைகளையும் எழுப்புவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று 20-25 பில்லியனர்கள் மட்டுமே நாட்டின் செல்வத்தை வைத்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அரசியலமைப்பிற்கு எதிரானவை, ஆட்சிக்கு வந்ததும், எங்கள் அரசாங்கம் சாதி குழுக்களின் மக்கள்தொகை மற்றும் ஆட்சியில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ணயித்த பிறகு 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நாங்கள் உடைப்போம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதியும் அதன் பங்கைப் பெற வேண்டும். இதைச் சொல்வது நீங்களோ நானோ அல்ல, ஆனால் அனைவரும் சமம் என்று கூறும் அரசியலமைப்புச் சட்டம்.
அரசியல் சாசனத்துக்கும், மனுதர்மத்துக்கும் இடையேயான போரை தேசம் பார்த்து வருகிறது. நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்ததை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பவில்லை. அரசியல் சாசனம் மீதும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. ஒரு வகையில், கங்கை நதி கங்கோத்ரியில் உற்பத்தியாகவில்லை என்று அவர் கூற விரும்புகிறார்.
வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். கூட்டணியுடனான போராட்டம் ஒரு சித்தாந்த ரீதியானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் இரவும், பகலும் போராட வேண்டும்.
நாட்டில் அடுத்த பெரிய தேர்தலை பீகார் எதிர்கொள்ள இருக்கிறது. இது ஒரு புரட்சியின் களம் ஆகும். இங்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவுக்கு சிந்தாந்த தோல்வியை பரிசளிப்போம். இந்த தோல்வியை ஏற்படுத்த காங்கிரஸ் தொண்டர்களும், இந்தியா கூட்டணியினரும் உறுதியெடுக்க வேண்டும்.
வினாத்தாள் கசியும் மையமாக பீகார் மாறியிருக்கிறது. இங்குள்ள அதிக அளவிலான வேலையின்மை விகிதம் மாநிலத்தை தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி இருக்கிறது. மராட்டியத்தில் மக்களவை தேர்தலில் ஓட்டு போட்ட சுமார் 1 கோடி வாக்காளர்கள் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த 2 தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கேட்டபிறகு தேர்தல் கமிஷன் வழங்கவில்லை. சாதி கணக்கெடுப்பு முடிந்ததும், பல்வேறு துறைகளில் சாதி குழுக்களின் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கொள்கை வகுக்கப்படும்.
பீகாரில் சாதி கணக்கெடுப்பைப் போல நாங்கள் சாதி கணக்கெடுப்பைச் செய்ய மாட்டோம், இது மக்களை முட்டாளாக்குவதற்காகவே செய்யப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் சாதி குழுக்களின் சரியான பங்கை அது நமக்குத் தெரிவிக்கும் வகையில் நாங்கள் அதைச் செய்வோம்" என்று ராகுல்காந்தி கூறினார்.