
திருச்சி,
தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமூக ஊடக தளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உதாரவிட்டது. சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாராண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திருச்சி கோர்ட்டில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது டி.ஐ.ஜி. வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க சீமான் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு தொடர்பான 6 ஆவணங்களை சீமானிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சீமான் தரப்பினர் 6 ஆவணங்களை பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், "சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் அவர்களுக்கு என்ன தொடர்பு என்பது பற்றி போலீஸ் தரப்பு தெளிவாக கூறவில்லை.
அதேபோன்று அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட திருச்சி சாமி ரவி, திண்டுக்கல் மோகன் ராம் ஆகியோரை என்கவுண்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்ட்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுகிறது" என்று கூறினார்.