
சென்னை,
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இது பல்வேறு வடமாநிலங்களுக்கும் தேவையான மழைப்பொழிவை வழங்குகிறது. இந்த பருவகாலத்தில் தமிழகம் ஓரளவே மழை பெறும். வடகிழக்குப் பருவமழையே நமக்கு அதிகமான மழையைத் தருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சராசரியைவிட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரியை ஒப்பிட்டதில் நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு 87 செ.மீ முதல் 105 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சராசரியைவிட அதிகமான மழைப் பொழிவு இந்தியாவுக்கு இருக்கும் என்றாலும் வடமாநிலங்களில்தான் இது அதிக மழையைத் தருகிறது. 33 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குபருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சாதாரணமானது முதல் இயல்பைவிட அதிக மழை பெறும் வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.