
சென்னை
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், பம்மல், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர், புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
தென்தமிழகத்தில் சிவகங்கைக்கு உட்பட்ட காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. திண்டுக்கல், மணிக்கூண்டு, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் அரிமளம், பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.