ஏலகிரி: ஏலகிரி மலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஒயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தாலும் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வழக்கம்போல் நேற்று மாவட்டத்தில் ஏலகிரிமலை, ஜோலார்பேட்டை பகுதிகளில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் ஏலகிரிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் மின்கம்பங்களும் சில இடங்களில் சாய்ந்தது. இதனால் பல இடங்களில் மின்சார ஒயர்கள் அறுந்து தொங்கியது.
நள்ளிரவு 12 மணியளவில் ஏலகிரி மலையின் முக்கிய சாலையான அத்தனாவூர்-நிலாவூர் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் மலையில் இருந்து இரவில் இறங்கிய சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால் வாகனங்கள் நீண்டவரிசையில் நின்றது.
இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ெநடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் சென்று, ஜேசிபி மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post ஏலகிரிமலையில் பலத்த காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.