தமிழகத்தில் இன்று முதல் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

3 hours ago 3

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை திருத்தணி, ஈரோடு பகுதியில் 102 டிகிரி பதிவானது. கரூர், மதுரை, பாளையங்கோட்டை, வேலூர் 100 டிகிரி, சென்னை, நாகப்பட்டினம், திருச்சி 99 டிகிரி. கடலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன், தென் மேற்கு பருவமழை அந்தமான் பகுதியில் 13ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திற்பரப்பு, பண்ணாரி, திருப்பத்தூர், கோடியக்கரை பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்தது. இன்றைய நிலையில் (9ம் தேதி) அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நள்ளிரவுக்குள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்யும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் பகுதிகளில் 13ம் தேதி மழை பெய்யும். இது மேலும் தீவிரம் அடைந்து கனமழையாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 14ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். மே 3வது வாரத்தில் மாலை நேரத்தில் மழை தொடர்ச்சியாக பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. மாத இறுதி வரை இது தொடரும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று முதல் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article