சென்னை: தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்கள், சத்தீஸ்கரில் 5 ரயில் நிலையங்கள், பீகாரில் 2 ரயில் நிலையங்கள், ஜார்க்கண்டில் 3 ரயில் நிலையங்கள், கர்நாடகாவில் 5 ரயில் நிலையங்கள், குஜராத்தில் 18 ரயில் நிலையங்கள், கேரளாவில் 2 ரயில் நிலையங்கள், மத்தியப் பிரதேசத்தில் 6 ரயில் நிலையங்கள், மகாராஷ்டிராவில் 15 ரயில் நிலையங்கள், ராஜஸ்தானில் 8 ரயில் நிலையங்கள், தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள், தெலங்கானாவில் 3 ரயில் நிலையங்கள், மேற்குவங்கம், ஆந்திரப் பிரதேசம், அசாம், புதுச்சேரி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா 1 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்த வரை, பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சிதம்பரம், மன்னார்குடி ஆகிய 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல ஆந்திராவில் சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் என தெற்கு ரயில்வேக்கு கீழ் வரும் 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
The post தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.