தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

1 day ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. 27-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை வெப்பம் சுட்டெரிக்கும் என முதலில் சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னர் மேலும் 3 நாட்களுக்கு அதாவது, நாளை (வியாழக்கிழமை) வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என கூறப்பட்டது.

அதன்படி, வெப்பத்தின் அளவு இயல்பைவிட சற்று கூடுதலாகவே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக வாட்டி வதைத்த வெயிலுக்கு சற்று இடைவெளி கொடுக்கும் வகையில் கோடை மழை எட்டி பார்க்க இருக்கிறது.

ராஸ்பி அலைவு, வெப்பமண்டல காற்று குவிதல் மற்றும் காற்று சுழற்சி போன்ற காரணிகளால் நாளை தொடங்கும் இந்த கோடை மழை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) வரை நீடிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் நாளை முதல் 5-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில் நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 4 மற்றும் 5-ந்தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாக உள்ளதாகவும், அதனால் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதனால் இயல்பைவிட வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பான அளவில் இருக்கும் எனவும், கோடை மழை என்பதால், மழைப்பொழிவு மாவட்டம் முழுவதும் பெய்யாது எனவும், பகலில் வெப்பம், இரவில் இடி மின்னலுடன் மழை என்ற நிலையிலேயே பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article