சென்னை: தமிழகத்தில் பல வகையான பறவைகள் உள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பறவைகள், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் ஆகும். எனவே, பறவை இனப்பன்மையை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பேணவும், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் பறவைகளை கண்காணிப்பதன் நோக்கம் பறவைகளின் இருப்பை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான அச்சுறுத்தல் காரணிகள் உள்ளிட்ட பிற முக்கிய சூழல் அம்சங்களையும் பதிவு செய்து, பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்புக்கான சிறந்த நீண்டகாலத் திட்டங்கள் வடிவமைக்க உதவுகிறது. இவை பறவை இனங்களின் செயல்பாடுகள், பரவல் மற்றும் செறிவு பற்றிய உள்நோக்கை வழங்கி பறவைகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது.
தமிழ்நாட்டில் இடம்பெயரும் பறவைகள் பருவம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தொடர்கிறது. பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு சரணாலயங்களில் உள்ள பறவைகளை கண்காணிப்பது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருந்தாலும், பறவைகளின் பல்வேறு வாழ்விடங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு பயிற்சியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வனத்துறையால் நடத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.
கட்டம் 1: ஈர நிலப் பறவைகள் (உள்நாட்டு மற்றும் கடலோர ஈர நிலங்கள்) 8 மற்றும் 9 மார்ச் 2025.
கட்டம் 2: நிலப்பகுதி பறவைகள் (பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும்) 15 மற்றும் 16 மார்ச் 2025. இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 இரவு நேரப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
934 இடங்களில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 397 பறவை இனங்களைச் சேர்ந்த 5,52,349 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில், 1,13,606 பறவைகள் இடம்பெயரும் பறவைகள் மற்றும் 49% பறவைகள் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவை. சின்னக்கொக்கு/கள்ளவாயன் (Little egret), சிறிய நீர்க்காகம் (Little cormorant), நத்தைகுத்தி நாரை (Asian open bill), கருந்தலை அரிவாள்மூக்கன் (Black headed Ibis), அன்றில் (Glossy Ibis) மற்றும் குளக்கொக்கு (Indian pond Heron) ஆகியவை வசிக்கும் பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன. சாம்பல்நிற வாத்து (Greylag Goose), பெரும் பூநாரை (Greater Flamingo), பெரியகோட்டான் (Eurasian Curlew), கோணமூக்கு உள்ளான் (Pied Avocet), சிறிய கொண்டை ஆலா (Lesser Crested Tern) மற்றும் கரண்டிவாயன் (Eurasian Spoon bill) ஆகியவை புலம்பெயர்ந்த பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.
1093 இடங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 401 பறவை இனங்களைச் சேர்ந்த 232519 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில், 113606 பறவைகள் புலம்பெயர்ந்த பறவைகளாக இருந்தன. வீட்டுக்காக்கை (House crow), நாகணவாய் (Common Myna), பச்சைக்கிளி (Rose Ringed Parakeet), சின்னான் (அ) செம்புழை கொண்டலாத்தி (Rose Vented Bulbul), தவிட்டு குருவி / பூனியல் குருவி (Yellow-billed Babbler), பனை உழவாரன் (Asian Palm Swift), கறுங்கரிச்சான் (Black Drango), சின்னக்கொக்கு/கள்ளவாயன் (Little Egret), இந்திய மயில் (Indian Pea fowl), புள்ளிப்புறா (Spotted Dove) ஆகியவை மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன. இந்த ஆண்டு கணக்கெடுப்பு மார்ச் மாதத்தில்,
இடம்பெயரும் பருவத்தின் முடிவில், பருவத்தின் வெவ்வேறு மாதங்களில், பறவைகளின் எண்ணிக்கையைப் பரப்பும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாதங்களில் பறவைகளைப் பார்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், மிகவும் நல்ல மதிப்பீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு வனத்துறை, தன்னார்வலர்களை இந்த பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கிறது. இருப்பினும் தரவுகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்வது நிபுணர்களின் குழுவால் மட்டுமே செய்யப்படுகிறது. வரவிருக்கும் மாதங்களில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இடஞ்சார்ந்த-தற்காலிக மாறுபாடுகள் குறித்த ஆழமான நுண்ணறிவு பெற ஏராளமான தரவுகள் மேலும் பகுப்பாய்வு செய்யப்படும்.
The post தமிழகத்தில் 5.52 லட்சம் நீர் வாழ் பறவைகள்; 2.32 லட்சம் நிலத்தில் வாழும் பறவைகள்: கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்! appeared first on Dinakaran.