திருவாரூர்: தமிழகத்தில் 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் குழுக்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடன் இணைப்பாக பெற்றுத் தந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு பணிக்காக வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் நாள் முதல் நிகழ்ச்சியாக திருவாரூர் ஓன்றியம் பழவனக்குடி ஊராட்சி கிராம சேவை கட்டிடத்தில் மகளிர் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிராமப்புறங்களில் 3 லட்சத்து 30 ஆயிரம் குழுக்களும், நகர்ப்புறத்தில் ஓரு லட்சத்து 50 ஆயிரம் குழுக்களும், என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் தற்போது நடைமுறையில் இருக்கின்றனர். இக்குழுக்களில் 54 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடியை வங்கிக் கடன் இணைப்பாக பெற்றுத் தந்துள்ளோம்.
வருகின்ற 8ம் தேதி (நாளை) மகளிர் தினத்தன்று சென்னையில், 3 ஆயிரத்து 19 கோடி ரூபாயில் கடன் இணைப்புகளை முதல்வர் வழங்கவுள்ளார். இப்படி வழங்கப்படுகின்ற அந்த கடன்களை எந்த அளவுக்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள். அதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களைபெற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் எந்த அளவிற்கு கடன் தொகையை தங்களது வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி உள்ளனர், என்னென்ன திறன் பயிற்சி தேவைப்படுகிறது, செயல்படாத குழுக்கள் எவ்வாறு செயல்பட நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி அரசின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம் உட்பட திட்டங்கள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் மகளிர் குழுவினரிடம் கேட்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
* மனு கொடுத்த 6 மணி நேரத்தில் வீட்டுக்கே சென்று இலவச பட்டா வழங்கிய உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தியபோது, பட்டியல் வகுப்பை சேர்ந்த மேகநாதன் மனைவி சுகன்யா, தன்னுடன் சேர்த்து 6 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களிடம் துணை முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் காலை 11 மணியளவில் அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடி தீர்வாக 6 மணி நேரத்திற்குள் மாலை 5 மணி அளவில் 6 நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டாவை துணை முதல்வர் அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினார். இதற்கு அங்குள்ள பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post தமிழகத்தில் 4 ஆண்டுகளில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1.05 லட்சம் கோடி கடன்: துணை முதல்வர் உதயநிதி தகவல் appeared first on Dinakaran.