பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.89 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள்

3 hours ago 3

ஈரோடு, மே 15: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டன. இதன் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், 15 அரசுத்துறைகளை சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, தீர்வு காணப்படவுள்ளன. அந்த வகையில் பெருந்துறை வட்டத்தில் துடுப்பதி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், ஈங்கூர், கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நேற்று இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துடுப்பதி ஊராட்சி, சின்னமல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம் ஊராட்சி, குஞ்சரைமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஈங்கூர் தம்பிராட்டியம்மன் திருமண மண்டபம், கூத்தம்பாளையம் ஊராட்சி அக்கரயாம்பாளையம் கன்னிமார் காளியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனை பட்டா வரன்முறை படுத்துதல், உட்பிரிவு பட்டா, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம், கூட்டுறவு துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகள், மேலும், மனுக்கள் வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வாக மின் இணைப்பு பெயர் மாற்றம் உத்தரவு, பதிவு அட்டை மற்றும் புதிவு அட்டை புதுப்பித்தல் ஆணை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா சலவை பெட்டி என 157 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் அருணா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.89 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article