மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பஜார் வீதி மையப்பகுதியில் அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செய்யூர் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், செய்யூர் தொகுதி விசிக எம்எல்ஏ பனையூர் பாபு விடம் இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, எம்எல்ஏ பனையூர் மு.பாபு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யூர் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிட வசதி இல்லை எனவும், பழுதடைந்த கட்டிடங்களில் மருத்துவமனை செயல்படுவதாகவும், மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிப்பு, மருந்து வழங்குமிடம், நோயாளிகள் சிகிச்சை வார்டு ஆகியவை தனித்தனி கட்டிடங்களில் செயல்படுவதாகவும், ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடம் அமைத்துதரவேண்டுமென கோரிக்கை வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்யூர் அரசு மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட ₹3.20 கோடியை சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, எம்எல்ஏ பனையூர் மு.பாபு, செய்யூர் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, பாழடைந்த பயன்படுத்த முடியாத பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நிருபர்களிடம் எம்எல்ஏ பனையூர் மு.பாபு கூறுகையில், ”செய்யூர் அரசு பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட ₹3.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி ஆகியோர் நன்றி தெரிவிக்கிறேன். புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும்” என்றார்.
ஆய்வின்போது, திமுக ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாபு, அவைத்தலைவர் மணி, துணை செயலாளர் அர்ஜுனன், கவுன்சிலர் மோகனா கோபிநாத், ஊராட்சி தலைவர்கள் லோகாம்பிகை ராஜமாணிக்கம், வேலாயுதம், சசிகுமார், நகர செயலாளர் எழில் ராவணன், கிளை செயலாளர்கள் காளியப்பன், மோகன், மணிவண்ணன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.
The post செய்யூர் அரசு பொது மருத்துவமனைக்கு ரூ3.20 கோடியில் ஒருங்கிணைந்த கட்டிடம்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விசிக எம்எல்ஏ பனையூர் பாபு appeared first on Dinakaran.