சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் கிடைத்த வெற்றியை 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது. திமுக தவிர தேர்தலில் போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்தி இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் ஓய்வில்லா உழைப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி. களத்திற்கு வரும் முன்னே முடிவினை உணர்ந்து, ஒதுங்கி ஓடிய பாசிஸ்ட்டுகளும் – அடிமைகளும் இனிமேலாவது பொய்ப் பிரசாரத்தையும் அவதூறு அரசியலையும் கைவிடுவது நல்லது. ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றிருக்கும் வி.சி.சந்திரகுமாருக்கும், வெற்றிக்காக உழைத்த கழகத்தினர் – தோழமை இயக்கத்தினருக்கும் வாழ்த்துகள். தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி.
தாழ்ந்து கிடந்த தமிழினத்தை சுயமரியாதை உணர்வூட்டி தட்டி எழுப்பிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் மண்ணில் கழகம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026-இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதியில் கிடைத்த வெற்றியை 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.