சென்னை: தமிழகத்திற்கு கல்விக்கான நிதி, பேரிடர் மேலாண்மை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை தராமல் இழுத்தடிக்கும் நிலையில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் தமிழகம் வர திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்க தமிழக அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 ேகாடி நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக அறிவித்துள்ளது தற்போது தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று பேரிடருக்கான நிதி, மெட்ரோ பணிக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகை, பிரதமர் வீடு கட்டும் திட்டம் என பல வழிகளில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு சரிவர தராமல் இழுத்தடித்து வருகிறது. ஒவ்வாரு பிரச்னைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். நேரிலும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனாலும், ஒன்றிய அரசு மாற்றான்தாய் மனப்போக்குடன் தமிழகத்தை நடத்தி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகிற 28ம் தேதி சென்னை ஐஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார். அதேபோன்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 26ம் தேதி கோவைக்கு வர உள்ளதாகவும், பாஜ மாநில தலைவர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து, பிரதமர் மோடியும் வருகிற 28ம் தேதி தமிழகம் வருவார் என்று கூறப்படுகிறது.
அவர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி செலவில் புதிய கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளதால் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் சென்னை வரும்போது அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், கருப்புகொடி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த தமிழக அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதனால் அவர்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கு தொடரும் நிலையில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா தர்மேந்திர பிரதான் தமிழகம் வருகை: பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவு appeared first on Dinakaran.