ராசிபுரம்: தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து, உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் முடிவு செய்துள்ளனர். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு மாநிலத்தில் கல்வி திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது, அந்த மாநிலத்தின் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது.
ஒன்றிய அரசு வேண்டுமானால், அவர்களின் கருத்ைத கூறலாம். ஆனால், நாங்கள் கொண்டு வரும் திட்டத்தை கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறக்கூடாது. அதிலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ரூ.2,150 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் அபத்தமானது. இந்த நேரத்தில், தமிழக அரசுடன் இணைந்து அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை ஒதுக்காததால், மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும்.
இந்த வகையில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்படுவர். 451 தொழிற்கல்வி பயிற்றுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கான நீதி கேட்டு, விரைவில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
The post தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஓரிரு நாட்களில் உண்ணாவிரதம்: அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.