ஹைதராபாத் : ஆந்திராவில் ஆக.15 முதல் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம், டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து பஞ்சாப் மாநில அரசும், தமிழக அரசும் 2021-ம் ஆண்டு முதல் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தின.அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 8-வது மாநிலமாக ஆந்திராவுக்கு இணைந்திருப்பது இத்திட்டத்துக்கு நாடு முழுவதும் கிடைக்கும் வரவேற்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், சட்டப்பேரவை தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சி அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்த உள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு நடத்தும் APSRTC பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும் என அறிவித்துள்ளார். ஸ்வர்ண ஆந்திரா – ஸ்வச் ஆந்திரா திட்டத்தில் பங்கேற்க கர்னூலுக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அவர் அறிவித்தார்.
இதனிடையே மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவது, வேலைக்குச் சென்று வருதல், மளிகை சாமான்கள் வாங்குதல், கோயில்களுக்கு செல்லுதல், உறவினர்களைப் பார்த்து வருதல், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று வருதல் போன்றவற்றுக்கு இலவச பயணத்தை மகளிர் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மகளிர் சுதந்திரமாக நடமாடுவதன் மூலம் பொது இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.500 வரை போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்றும் மகளிர் தெரிவித்துள்ளனர்.
The post ஆந்திராவில் ஆக.15 முதல் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.