
புதுடெல்லி,
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக காவிரி தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்னை உள்ளது. கடந்த மே 22-ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம், டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அந்த மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூலையில் 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலையில் 32.24 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.