
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் 3-வது டெஸ்டில் ஆடுவார் என கேப்டன் கில் தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் வாய்ப்பு பெற்றார்.
முன்னதாக முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளதால் இந்த முக்கியமான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது பலலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. . பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது போட்டியில் விளையாடுவார் என்று கேப்டன் கில் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவை விளையாட வைக்காத இந்திய அணி பைத்தியக்காரத்தனமான முடிவை எடுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் விளாசியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "உலகின் சிறந்த கால்பந்து வீரரான ரொனால்டோ தகுதியோடு இருந்தும் போர்ச்சுகல் அணியில் அவரை ஆட வைக்காததற்கு நிகரானது, தற்போது பும்ராவை இந்திய அணியில் எடுக்காமல் இருப்பது. தகுதியோடு இருந்தும் அவரை ஆட வைக்காதது பைத்தியக்காரத்தனமான முடிவு. என்ன இது? இதைப் பார்த்து நான் குழப்பமடைந்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.