
வாஷிங்டன்,
உக்ரைன் -ரஷியா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா உடன்படவில்லை என்றால் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
இதனால் இந்தியா உள்பட அமெரிக்காவிடம் வர்த்தக தொடர்பில் இருக்கும் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், 500% வரி விதிக்கும் முடிவு குறித்து அமெரிக்க அரசிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டனில் இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்காக மத்திய வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவினர் வாஷிங்டன் சென்றுள்ளனர்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் முடிவு குறித்து அமெரிக்க மந்திரி லின்சே கிரகாமிடம் பேசப்பட்டதாகவும், எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான நமது கவலைகள் மற்றும் நலன்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.