
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நீடித்து வந்தது. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. நாளை (புதன்கிழமை), கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மார்ச் 12-ந்தேதி (நாளை) முதல் 14-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்றும், கோடை காலத்தில் குறிப்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வேலூர், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில், ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரையில் வெப்ப அலை வீசுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.