சென்னை,
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகம், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருப்பூர், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (திங்கட்கிழமை) ,நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), 16-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையுமவாய்ப்பு இருக்கிறது.வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் எனவும், இது தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக் கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.