தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிகளுக்கான குழுக்கள் அமைப்பு

2 hours ago 2

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இந்த நிலையில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 26 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் தலைவராக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், ஒருங்கிணைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பரணி பாலாஜியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் முழு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு, வாகன நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை ஒழுங்கு அமைவு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மானக் குழு, உபசரிப்பு குழு, திடல் பந்தல் அமைப்பு உதவி குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு, மகளிர் பாதுகாப்பு குழு, அவசர கால உதவி குழு, கொடிக் கம்பம் அமைப்பு குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு குழு, ஊடக ஒருங்கிணைப்பு குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு, துப்புரவு குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த குழுவினர் மாநாட்டுப் பணிகளை முழுமையாக மேற்பார்வையிட நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் பேச்சாளர்கள் மற்றும் பயிற்சிக் குழுவின் தலைவராக யாஸ்மின், ஒருங்கிணைப்பாளராக ஜெகதீஸ்வரன், உறுப்பினர்களாக லயோலா மணி, வீரவிக்னேஷ்வரன், பாலாஜி, செல்வபாரதி, ரமேஷ், தேவி, துர்கா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article