தமிழக வீரர்களால் குஜராத் முதலிடம்: சாதிக்கும் சாய் சுதர்சன், சாய் கிஷோர்

1 week ago 2

அகமதாபாத்: ஐபிஎல் டி20 18வது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இந்த அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், தாங்கள் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் சாதித்து வருகின்றனர். தொடக்க வீரராக களமிறங்கும் சாய் சுதர்சன் இதுவரை 5 போட்டிகளில் 4ல் அரை சதம் அடித்துள்ளார்.

கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதுவரை 5 போட்டியில் ஆடி 273 ரன்களுடன் 2ம் இடத்தில் (முதலிடம் கிகோலஸ் பூரன்-288) உள்ளார். இதேபோல், பந்துவீச்சில் சாய் கிஷோர் பட்டைய கிளப்பி வருகிறார்.

ஒவ்வொரு போட்டியிலும் புதுவிதமாக பந்துகளை வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இவர், கடைசியாக ஆடிய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதுவரை 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்களுக்கான நீல நிற தொப்பி போட்டியில் 2ம் இடத்தில் (முதலிடம் நூர் அகமது-11 விக்கெட்) உள்ளார்.  இவர்களை போல், சன்ரைசஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் குவித்து குஜராத் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஷாருக்கானும் தனக்கு கிடைக்கும் வாய்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 20 பந்துகளில் 36 ரன்கள் குவித்து, ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இப்படி 4 தமிழக வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், குஜராத் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. தான் ஆடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. ரன் ரேட்டிலும் பிளஸ் 1.413 என முன்னிலை வகிக்கிறது.

The post தமிழக வீரர்களால் குஜராத் முதலிடம்: சாதிக்கும் சாய் சுதர்சன், சாய் கிஷோர் appeared first on Dinakaran.

Read Entire Article