
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு தமிழக நீர்வள துறை அமைச்சர் மற்றும் தி.மு.க.வின் பொதுச்செயலாளரான துரை முருகன் தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் விழாவில் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், தி.க. தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேபோன்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய அண்ணன் மு.க. அழகிரி தன்னுடைய பேரனுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.