தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

2 hours ago 1

தமிழ்நாட்டுக்கு 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை இருப்பது தனிசிறப்பாகும். கடலோரங்களில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் பிழைப்புக்காக கடும் புயலோ, கன மழையோ, ஆர்ப்பரிக்கும் அலையோ, கொளுத்தும் வெயிலோ என்ன இயற்கை சீற்றம் என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 'தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்' என்பதே தங்கள் வாழ்க்கை என்ற வகையில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கிறார்கள். இயற்கை சீற்றங்களில் இருந்து கடல் அன்னை காப்பாற்றிவிடுவாள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொழிலை நடத்திவந்த தமிழக மீனவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால்தான் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும்போது எந்த நேரத்திலும் இலங்கை கடற்படையினர் வந்து தங்களை பிடித்து சென்றுவிடுவார்களோ, என்ற நிச்சயம் இல்லாமல்தான் பொழுதை கழிக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 554 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 72 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை பிடித்து செல்லும்போது சிலநேரங்களில் அடி, உதை கிடைக்கும் என்றநிலை மாறி இப்போது அவர்களால் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் தொடங்கிவிட்டது.

காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான மிதிலன் என்ற படகில் காரைக்காலில் உள்ள கிளிஞ்சல்மேடு, திருப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி, நாகை மாவட்டம் நம்பியார்நகர் ஆகிய இடங்களில் இருந்து 13 மீனவர்கள் கடந்த மாதம் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கும்மிருட்டில் இலங்கை கடற்படை சுற்றி வளைத்தது. அங்கு மீன்பிடித்துக்கொண்டு இருந்த மற்ற படகுகளெல்லாம் தப்பிசென்றுவிட்டநிலையில் மிதிலன் படகு மட்டும் மாட்டிக்கொண்டது. அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் இலங்கை கடற்படையினர் மிதிலன் மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் காரைக்கால் மீனவர் செந்தமிழ், நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த பாபு ஆகியோர் துப்பாக்கிசூட்டில் படுகாயம் அடைந்தனர்.

மேலும் 3 மீனவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து மத்திய அரசாங்கம் பொறுப்பு இலங்கை தூதர் பிரியங்கா விக்ரமசிங்கேயிடம் தன் எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகும் கைது படலம் தொடர்ந்துவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்யப்படும் மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவது உறுதி செய்யப்படவேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் நிராயுதபாணியாக இருக்கும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்பதை மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் பங்கம் ஏற்படாமல் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்லவழியை காணும் பேச்சுவார்த்தையை அதாவது இருநாட்டு அரசாங்கங்கள் மூலமாகவோ அல்லது இருநாட்டு மீனவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தை மூலமாகவோ நிரந்தர தீர்வை காணவேண்டும். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையே என்ற மனக்குறை தமிழர்களுக்கு நிறையவே இருக்கிறது. இலங்கைக்கு இப்போது புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு மத்திய அரசாங்கம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் இன்னும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

Read Entire Article