
மும்பை,
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் புதிய கேப்டனை தேடும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது.
இதில் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில்லின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பண்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராதான் சரியான தேர்வு என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் காயங்களை சந்திப்பதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து பும்ராவை கேப்டனாக நியமிக்காமல் தவறு செய்யக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா சரியான நபர் என்று நான் நினைக்கிறேன். உடற்தகுதி என்பது வேறு விஷயம். ஆனால் பும்ரா சரியான உடற்தகுதி உள்ளவராக இருந்தால், அவர்தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். ரோகித் போன்ற பெரிய வீரர்கள் அணிக்குள் வந்தால் மற்ற இளம் வீரர்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் தானாகவே முதல் தேர்வாகிவிடுவார்கள்.
பார்ம் எந்த நேரத்திலும் திரும்பி வரலாம். பார்ம் பற்றி ஒன்றுமில்லை. அவரின் சமீபத்திய செயல்திறன்கள் சிறப்பாக இல்லை. ஆனால் ஓய்வு குறித்து அவர் எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவுதான். அவர் அதை நன்கு யோசித்தி எடுத்திருப்பார்" என்று கூறினார்.