சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும்; அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுவார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்த பண்டிகை விளங்குகிறது.
விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களை தொடங்கும் வெற்றி திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.