
சென்னை,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜனதா தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை நேற்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி பா.ஜனதாவின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று தனது விருப்ப மனுவை நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் கமலாலயத்தின் நுழைவு வாயிலை தொட்டு வணங்கி உள்ளே சென்றார்.
அப்போது மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். விருப்ப மனுவை, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் பெற்றுக் கொண்டார்.
நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளதால், 13-வது மாநில தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக, பா.ஜனதாவின் சட்ட விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கும் 50-க்கும் அதிகமானோர் விருப்பமனு வழங்கினர்.
இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
இதுவரை தமிழக பா.ஜனதாவில், நாடார் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் தலித் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் மாநில தலைவராக பதவி வகித்துள்ளார்கள். முதன்முறையாக, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை மாநில தலைவராக பா.ஜனதா தேசிய தலைமை நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.