தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை

1 week ago 5

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், அடுத்த 5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அதாவது, நாளை மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் சட்டசபை கூட்டம் இல்லை. அடுத்த நாள் (11-ந்தேதி) சட்டசபைக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 12 மற்றும் 13-ந் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது. 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம் என்பதால் அரசு விடுமுறை நாளாகும். அன்றும் சட்டசபை கூட்டம் இல்லை. இப்படி, 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர்ந்து விடுமுறை வருகிறது.

அடுத்து 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இம்மாதம் 29-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article