சென்னை: தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாக கருதுகிறேன். தனது நாவன்மை காரணமாக எண்ணிலடங்காத இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர் குமரி அனந்தன் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தமிழக மக்களால் பேரன்போடு இலக்கியச் செல்வர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக தமது 93-வது வயதில் காலமான செய்தி கேட்டு வருத்தமும், துயரமும் அடைந்தேன். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறுகிற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க இருந்த நிலையில் இடிபோன்ற துயரச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.