தமிழக கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பு: மீனவர்கள் கடும் எதிர்ப்பு

3 hours ago 1

திருச்சி: தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும், கடல் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் 10வது சுற்று ஏல அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டம் செயலாக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு ஏற்படும். கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இந்த திட்டம் செயல்படுத்தக்கூடாது என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மீனவர் பேரவை மாநில செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன்: மீனவர்களை மீன்பிடி தொழிலில் இருந்து அப்புறப்படுத்தவே இந்த திட்டம் உதவும். திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மீனவர் இனத்தையே அழித்து வெளிநாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கான வழியை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த பார்க்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை குழிதோண்டி புதைக்க பார்க்கும் இந்த ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெறாவிட்டால் கிழக்கு கடற்கரை மீனவர்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார்: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. அதில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமும் ஒன்று. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவது மட்டும் இன்றி, எதிர்காலத்தில் மீன் வளமே இல்லாம் போகும் அபாய நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்வதையும் ஒன்றிய அரசு தடுப்பதில்லை. மீனவர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் அசன் மைதீன்: இந்த திட்டம் செயலாக்கப்பட்டால் தமிழகத்தின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீன்வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். தற்போது மீனவர்கள் இலங்கை அரசு மற்றும் கடற்படையால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் தின்டத்தை செயல்படுத்தினால் மீன்கள் இன்றி, மீனவர்கள் இன்றி கடற்கரை காணப்படும். மீன்பிடி தொழில் அழிந்து ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

The post தமிழக கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பு: மீனவர்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article