![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/22/35249989-chennai-06.webp)
கரூர்,
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அருகே உள்ள சுங்ககேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதங்களுடன் சில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, 3 வாலிபர்களை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், சூசையப்பர்பட்டினம் பகுதியை சேர்ந்த சிவசங்கரன், மதுரை மாவட்டம், செல்லூர், கல்பானம் ரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த், திண்டுக்கல் மாவட்டம், நாராயணபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தங்கியிருந்த அறையில் பட்டாக்கத்தி, சூரி கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவசங்கரன் தான் காதலித்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தனது நண்பர்களான ஆனந்த், ஹரிஹரன் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டு கரூருக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.