லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை. மருத்துவர்கள் உணவில் எதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தனர். அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைகிறார். இந்த வீடியோவை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த குடும்பத்தினர் பணிப்பெண் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 14ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சமையல் பணிப்பெண் ரினா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்த வீட்டில் வேலை செய்து வருகிறார். இருந்த போதிலும் அந்த குடும்பத்தினருக்கு எதிராக இப்படி ஒரு அருவருப்பான வேலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.