தனுஷ்கோடி அருகே பழுதாகி நின்ற விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை: மீனவர்கள் அதிர்ச்சி

1 month ago 4

மண்டபம்: தனுஷ்கோடி அருகே, பழுதாகி நின்ற மண்டபம் மீனவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த 18ம் தேதி கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் எஸ்தர், திருமுருகன், விஜயன், கருப்பையா ஆகியோர், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் வீசிய சூறைக்காற்றுக்கு அலையில் சிக்கி படகில் மரப்பலகை உடைந்து சேதமடைந்தது. கடலில் அலை அதிகமாக இருந்ததால் படகை சரிசெய்ய முடியவில்லை.

இதையடுத்து, தனுஷ்கோடிக்கு அருகிலிருந்த 6ம் மணல் தீடைக்கு படகை கரையேற்றினர். 4 மீனவர்களும் படகுடன் தீடையில் இருந்தனர். அப்போது, அந்த வழியாக கரை திரும்பிய மீனவர்கள், மணல் தீடையில் இருந்த 4 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து படகு உரிமையாளர் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து படகை இழுத்து கரைக்கு கொண்டு வர அனுமதி கேட்டிருந்தார்.

இந்நிலையில், தீடை பகுதிக்கு நேற்றுமுன்தினம் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகை கைப்பற்றி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இது உளவுத்துறை போலீசாருக்கு தெரியவரவே, படகு உரிமையாளருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பழுதாகி நின்ற படகை இலங்கை கடற்படை கைப்பற்றி இழுத்து சென்ற சம்பவம் படகு உரிமையாளர் மற்றும் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தனுஷ்கோடி அருகே பழுதாகி நின்ற விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை: மீனவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article