
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர். இவர் 'வாயமூடி பேசவும்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'மாரி' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் நடித்த சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகுதான் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.
ரோபோ சங்கர் நாயகனாக நடித்திருக்கும் படம் 'அம்பி'. இந்தப் படத்தை பாஸர் ஜே எல்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 'அம்பி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரோபோ சங்கர், "வெள்ளித்திரைக்குள் நுழையும்போது ஒரு கலைஞனுக்கான இடம் கிடைக்க வேண்டும். தனுஷின் 'மாரி' படத்தில் எனக்கு அந்த இடம் கிடைக்கவில்லை என்றால் வெள்ளித்திரையில் இடம்பிடித்திருக்க முடியாது. இந்தப் படத்திற்கு முன்பெல்லாம் ரோபோ சங்கர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வந்து நடித்துக்கொடுங்கள் என்பார்கள். நமக்கானத் தனித்துவத்தைக் காண்பிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் மாரி படத்தில்தான் எனக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் சாரும் எனது வாழ்க்கையில் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அவர் செய்த உதவியை மறந்தேன் என்றால் எனக்கு உணவு கூட கிடைக்காது. தனுஷ் சாருக்கு நான் செல்லப்பிள்ளை. என்னுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் தனுஷ் எனக்கு உதவி செய்திருக்கிறார். நான் இன்றைக்கு சந்தோஷமாக இருக்க அவரும் ஒரு காரணம் தான். தனுஷுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு மனதளவிலும் சக மனிதராகவும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். கொரோனா காலகட்டத்தில் நானும் எனது குடும்பமும் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அப்போது எனக்கு பண ரீதியாக மிகப்பெரிய உதவியாக இருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.