
சென்னை,
அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமலி' படத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ளனர். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது.குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளிநாடுகளில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக வெளியீட்டு நிறுவனம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை புக் மை ஷோஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத் இயக்குநரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து இயக்குநர் அபிஷன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தனுஷ் சாரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்காக வாழ்த்தினார். டீசரை பார்த்தபோதே கண்டிப்பாக இப்படம் நன்றாக வரும் என நினைத்தேன் எனக் கூறினார். உங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி " என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.