புதுச்சேரி, ஜன. 21: புதுச்சேரி வில்லியனூர் அடுத்து வடமங்கலம் பகுதியில் தனியார் ஷாம்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் புதுவை மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஷாம்புக்கு மூலப்பொருட்கள் மும்பையில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி புனேவை சேர்ந்த சாந்தராம் கொண்டல்கர் என்பவர் லாரியில் 29.850 டன் மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு வந்தார். அப்போது லாரியில் இருந்த மூலப்பொருட்கள் அனைத்தையும் இறக்கிவிட்டதும் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி மூலப்பொருள் சரியாக வந்து இறங்கியுள்ளதா என்று பார்த்துள்ளார். அப்போது, அதில் 4 டன் மூலப்பொருட்கள் குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தொழிற்சாலையில் இருந்த லாரி வெளியே செல்லும்போது, அங்கு வேலை செய்யும் ஊழியர் முருகன், லாரி ஓட்டுனர் சாந்தராம் இடையே பேச சென்றுள்ளார். அப்போது மற்ற ஊழியர்களில் 2 பேரை பிடித்து விசாரித்தபோது, தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் சிவபாதம், இளம்வழுதி, முருகன் ஆகியோர் மூலப்பொருட்கள் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் இச்சம்பவம் குறித்து தனியார் நிறுவனத்தின் ஊழியர் தமிழ்செல்வி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தனியார் ஷாம்பு தொழிற்சாலையில் 4 டன் மூலப்பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.