இடைப்பாடி: சேலம் இடைப்பாடியில், தனியார் பள்ளி வேனில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் அழகரசன் (40). நெசவு தொழிலாளி. இவரது மகன் கந்தகுரு (14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளி ஆண்டு விழாவில் உடன் படிக்கும் மாணவனுடன் கந்தகுருவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து பள்ளி வேனில் கந்தகுரு சென்றான். அதே வேனில், தகராறில் ஈடுபட்ட மாணவனும் வந்துள்ளான். வேனை ரித்திக்குமார் (25) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். வெள்ளாண்டிவலசு பஸ் நிறுத்தம் அருகே வேனுக்குள் மாணவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் சாலையோரத்தில் வேனை டிரைவர் ரித்திக்குமார் நிறுத்தினார்.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட மாணவன், கந்தகுருவின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி விட்டான். இதில், பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினான். உடனே டிரைவர் மற்றும் சக மாணவர்கள், கந்தகுருவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி மாணவன் கந்தகுரு பரிதாபமாக உயிரிழந்தான்.
இடைப்பாடி போலீசார் வந்து விசாரித்ததில் திடீரென ஏற்பட்ட மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால், கொலை நோக்கமில்லாத மரணம் என வழக்குப்பதிந்து, கந்தகுருவை தாக்கிய 14 வயது மாணவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாணவன் கந்தகுருவின் அக்கா கௌசிதா, கடந்த ஆண்டு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தற்போது கந்தகுருவும் இறந்துவிட்டான். 16 வயதில் ஒரு மகள் மட்டும் இருக்கிறார்.
The post தனியார் பள்ளி வேனில் மாணவர்கள் திடீர் மோதல் 9ம் வகுப்பு மாணவன் சாவு: தாக்கியவனை பிடித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.